டெல்லியிலியிருந்து ராஞ்சி வரை செல்ல தற்போது ராஜதானி ரயில் மட்டுமே இயங்கிவருகிறது. வியாழக்கிழமை 900 பயணிகளுடன் புறப்பட்ட இந்த ரயிலை, தவறான பாதையில் வந்துவிட்டதாகக்கூறி திடீரென ஜார்ஜண்ட் தலைநகருக்கு 200 கிமீ முன்பே தால்டன்கஜ் ஸ்டேஷனில் காலை 6.40 மணியளவில் நிறுத்திவிட்டனர். ரயில்வே துறை பல்வேறு காரணங்களைக்கூறி இதற்குமேல் பஸ் பிடித்து செல்லுமாறு பயணிகளை இறங்க வறுபுறுத்தியிருக்கின்றனர்.
பலர் கேள்விகேட்டும் எதற்கும் ரயில்வே துறை பதிலளிக்காத நிலையில் ஒரே ஒரு பெண் மட்டும் தனது இருக்கையைவிட்டு இறங்காமல் இருந்துள்ளார். இதனைக் கண்ட ரயில்வேதுறையினர் அவரை சொல்லியிருக்கின்றனர். ஆனால் அந்த பெண், தான் மிகவும் சிரமப்பட்டு முன்பதிவு செய்ததாகவும், அதனால் இறங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
அந்த பெண் ராஞ்சியைச் சேர்ந்த 25 வயது அனன்யா என தெரியவந்த. அவர் பனாரஸில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப்படிப்பு படித்துவருகிறார். இவர் தனது இறுதியாண்டு தேர்வுக்காக வாரணாசி சென்று திரும்ப ராஜ்தானி ரயிலில் முன்பதிவு செய்திருக்கிறார். ஆனால் திடீரென ரயிலை பாதியில் நிறுத்துவது எப்படி சரியாகும் என கேள்விகேட்டு 8 மணிநேரம் ரயில்வே துறையினருடன் போராடி இருக்கிறார். எப்படியும் ஞாயிற்றுக்கிழமை ராஜ்தானி ரயில் ராஞ்சிக்கு சென்றபிறகுதான் மீண்டும் டெல்லி திரும்பும். எனவே அதை இப்போதே செய்யலாம். மேலும் முன்பே அறிவிக்காத நிலையில் ரயில்வே நிர்வாகம் இதுபோல் செய்வது தவறு. ஒரு இந்திய குடிமகளாக எனக்கு இதைக் கேட்க உரிமை உள்ளது எனக் கூறி வாதாடி இருக்கிறார்.
மேலும் ரயில்வே அதிகாரிகளின் தவறுக்கு நான் ஏன் பேருந்தில் பயணம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கிறார். அனைவரும் தங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு சென்றாலும், தனி ஒருத்தியாக தன்னம்பிக்கை மிக்க குடிமகளாக தான் போராடுவதாக அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சருக்கும் ட்வீட் செய்தும் அவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் பலமணிநேர வாதத்திற்குப் பிறகு மதியம் 3 மணியளவில் அனன்யாவை மட்டும் வைத்துக்கொண்டு பாதை மாறியதால் 200 கிமீ செல்லவேண்டிய ரயில் வேறு பாதையில் 300 கிமீ தூரம் சென்று ராஞ்சியை அடைந்துள்ளது. இதற்காக அனன்யாவிற்கு ரயில்வே போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக தனது இறுதியாண்டு தேர்வுகளுக்கு தயாராகி வந்திருக்கிறார். மேலும் கொரொனா நோய்த்தொற்றுக் காரணமாக வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே வரும் ஒரே ரயிலில் மிகவும் சிரமப்பட்டு முன்பதிவு செய்து போகும்போது இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர் என அனன்யா கூறியுள்ளார். இந்த போராட்டம் தன்னை ஒரு தன்னம்பிக்கை(ஆத்ம நிர்பார்) மிக்கவளாக மாற்றியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.