’கோ கார்ட்’ எனப் படும் குட்டி கார் ரேஸ் விளையாட்டு விபரீதமானதால் இளம் பெண் ஒருவர் தன் குடும்பத்தினர் கண்முன் பரிதாபமாக பலியானார்.
பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் உள்ள ராம்புரா புல் பகுதியைச் சேர்ந்தவர் அமர்தீப் சிங். விவசாயி. இவரது மனைவி புனித் கவுர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றனர். ஹரியானாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு சென்ற அவர்கள், அங்கு பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர். பின்னர், கோ கார்ட் எனப்படும் குட்டி கார் ரேஸ் விளையாட்டை விளையாட முடிவு செய்தனர்.
புனித் கவுரும் அவர் கணவரும் காரின் முன் பகுதியில் அமர்ந்துகொள்ள, மகன் பாட்டியுடன் வேறு காரில் அமர்ந்து கொண்டான். அவர்கள் உறவினர்களும் ஆளுக்கு ஒரு காரில் ஏறி, ரேஸை தொடங்கினார். வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, ஹெல்மெட் அணியாத புனித் கவுரின் தலைமுடி, கார் டயரில் சிக்கியது. ஒரே நொடிதான்! அதற்குள் மண்டைத் தோலோடு, தலைமுடி முழுவதும் துண்டாகத் தனியாகப் போய் விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவர் உடனடியாக வண்டியை நிறுத்தினர். இதற்குள் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து புனித் கவுரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தப் பூங்காவில் கோ கார்ட் பகுதி உடனடியாக மூடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு விபரீதமான இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.