kerala heavy rain web
இந்தியா

பூமிக்குள் புதைந்த கிணறு.. கேரளாவில் மீண்டும் வெளுக்கும் மழை! முக்கிய அறிவிப்பு!

கேரளாவில் மழை வெளுத்துவாங்கிய நிலையில், தொடர்ந்து கனமழை இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Uvaram P

கேரளாவில் வெளுத்து வாங்கிய கன மழை படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மழை மேலும் வலுக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில், கொட்டித்தீர்த்த கனமழையால் கிணறு ஒன்று சட்டென பூமிக்குள் சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வெளுத்து வாங்கிய மழை!

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாகவே, கேரளாவில் தொடரும் கனமழையால் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மலப்புறம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையில், Vazhakkad பகுதியின் அருகே உள்ள ஒருவரின் வீட்டின் முன்பு இருந்த கிணறு இடிந்து விழுந்தது. தண்ணீர் இறைக்க ஏதுவாக கிணற்றுக்கு மேல் கட்டப்பட்ட கான்கிரட் மொத்தமாக பூமிக்குள் சென்றது. இப்படி, இடிந்து விழுந்ததால் வந்த சத்தத்தைக் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இன்றைய தினம் திருவனந்தபுரம் வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளைய தினம் வயநாடு, கோழிக்கோடு, ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" டும்.. திருவனந்தபுரம், கொல்லம் ஆலப்புழா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்"ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

29ம் தேதி அன்று, இடுக்கி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" டும் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூன்றாவது நாளாக, 30ம் தேதி அன்று இடுக்கி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்டும், 8 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வரை மழை குறையும் என்று தெரிவித்திருந்த நிலையில், அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளா மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.