மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி தாண்டன் மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சட்டப்பேரவை வருகிற 26-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி பாஜக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனிடையே இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டுள்ளார். இல்லாவிட்டால் அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனக் கருதப்படும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், தேவையென்றால் பாரதிய ஜனதாவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரச் சொல்லுமாறும் ஆளுநரிடம் கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 22 பேர் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தத்தைத் தொடர்ந்து கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.