இந்திய கார்ப்பரேட் துறையில் மனநலப் பிரச்னைகள் பலவீனமாகக் கருதப்படுவதால், 80% ஊழியர்கள் தங்கள் பாதிப்புகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். நீண்ட வேலை நேரம் மற்றும் விடுமுறை பற்றாக்குறை ஊழியர்களை மனஅழுத்தத்திற்குத் தள்ளுகிறது. சில நிறுவனங்கள் மனநல ஆலோசனை மற்றும் விடுமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, ஆனால், இது பரவலாக இல்லை.
இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், ஊழியர்களின் மனநலம் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இந்தக் கட்டுரை சில முக்கிய காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
மனநலப் பாதிப்புகளை ஒரு நோயாகப் பார்க்காமல், அதை ஒரு பலவீனமாகப் பார்க்கும் போக்கு இன்றும் நிலவுகிறது. "மனநலப் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தால் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ" என்ற அச்சத்தினால் 80% ஊழியர்கள் தங்கள் பாதிப்புகளை வெளியே சொல்வதில்லை. நீண்ட வேலை நேரம், விடுமுறை எடுக்க முடியாத சூழல் மற்றும் 24/7 மின்னஞ்சல்/அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை ஊழியர்களை 'பர்ன்-அவுட்' நிலைக்குத் தள்ளுகின்றன
பல நிறுவனங்கள் ஊழியர்களின் செயல்திறனை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனவே தவிர, அவர்களின் மன அமைதிக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மனநலத்திற்காகச் செலவிடுவதை ஒரு 'முதலீடாகப்' பார்க்காமல் 'தேவையற்ற செலவாகவே' பல நிர்வாகங்கள் கருதுகின்றன.மேலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஊழியர்களின் மனப் போராட்டங்களைப் புரிந்துகொள்ளும் 'உணர்வுப்பூர்வமான நுண்ணறிவு' அற்றவர்களாக இருப்பது ஒரு முக்கியப் பிரசனையாகும்
நிறுவனங்கள் மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசும் சூழலை உருவாக்க வேண்டும். அலுவலகங்களிலேயே மனநல ஆலோசகர்களை நியமித்தல் அல்லது ரகசியமாகத் தொடர்புகொள்ளக்கூடிய 'ஹெல்ப்லைன்' வசதிகளை ஏற்படுத்துதல், வார இறுதி நாட்களில் வேலை தொடர்பான அழைப்புகளைத் தவிர்த்தல் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான ஓய்வு வழங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மைக்காலமாக சில முன்னணி இந்திய நிறுவனங்கள், ‘மனநல விடுமுறை’ மற்றும் யோகா/தியான வகுப்புகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இன்னும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.