மிசோரம் ஜியோனா குடும்பம்
மிசோரம் ஜியோனா குடும்பம் ட்விட்டர்
இந்தியா

மிசோரமில் வசிக்கும் உலகின் மிகப்பெரிய குடும்பம்.. 181 பேர் ஒரே வீட்டில் வாழும் அதிசயம்!

Prakash J

உலகின் மிகப்பெரிய மிசோரமில் வசிக்கும் குடும்பம்

ஒருகாலத்தில் அதிகமான குழந்தைகளால் அந்த வீட்டின் குடும்ப நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. ஆனால், காலம் மாறமாற அதன் எண்ணிக்கை தற்போது சுருங்கிவிட்டதுடன், பல இடங்களில் கூட்டுக் குடும்ப வாழ்வும் மறைந்துவிட்டது. இந்தச் சூழலில், உலகிலேயே மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பட்டியலில் இந்தியர் ஒருவர் இருப்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது. அதிலும் அந்தக் குடும்பத் தலைவருக்கு 39 மனைவிகளும் 94 குழந்தைகளும் உள்ளனர் என்பதுதான் இன்னும் வியப்பான விஷயம்.

ஒரே ஆண்டில் 10 திருமணம் செய்த ஜியோனா

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று, மிசோரம். இம்மாநிலத்தின் பக்தாவாங் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சனா. 1945, ஜூலை 21 அன்று பிறந்த ஜியோனா, தமது 17வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். 'சானா பாவ்ல்' எனும் கிறிஸ்தவ மதக்குழுவின் தலைவராக ஜியோனா இருந்துள்ளார் என்றும், அந்த மதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இவரை 'ஹொடூபா' (தலைவர்) என அழைப்பார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 'சானா பாவ்ல்' மதக்குழு பலதார மணத்தை ஊக்குவிப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. குவாங்துவாங்கா (Khuangtuanga) எனும் மதப் போதகரால் 1942இல் மிசோராம் மாநிலத்தில் இந்த மதக்குழு நிறுவப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோனா பல திருமணங்கள் செய்தது எப்படி?

1942ஆம் ஆண்டு ஜியோனாவின் தாத்தாவை, பக்தாவாங் கிராமத்திற்கு அடுத்து உள்ள பூர்விகமான ஊரைவிட்டு வெளியேற அந்த ஊர் மக்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன்காரணமாக, பக்தாவாங் பகுதிக்கு வந்து நிலத்தை வாங்கி அங்கு குடிமர்ந்ததாகவும், அவருக்கும் பல மனைவிகள் இருந்ததாகவும், அவருக்குப் பிறகு மூத்த மகன் குடும்ப தலைவர் ஆனதாகவும், அவரையடுத்தே, அவருடைய மூத்த மகனான ஜியோனா குடும்பத் தலைவர் ஆனதாகவும், அவர்கள் சமூகத்தில் ஆண்கள் பல திருமணங்களை செய்துகொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தடவைக்குச் சமைக்கப்படும் 100 கிலோ அரிசி! 

அந்த வகையில், அவருக்கு மொத்தம் 39 மனைவிகளும், அதன்மூலம் அவர்களுக்கு 94 குழந்தைகளும் பிறந்துள்ளனர். மேலும் இந்தக் குழந்தைகளுடைய மனைவிகள் மற்றும் அவர்களுடைய 36 பேரக்குழந்தைகள் என ஒட்டுமொத்தமாக ஜியோனாவின் குடும்பத்தில் 181 பேர் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோனா எப்போதுமே தன்னைச் சுற்றியிலும் 7 அல்லது 8 மனைவிகள் உடன் இருப்பதை விரும்பியதாகவும் கூறப்படுகிறது. மனைவிகள் ஜியோனாவின் படுக்கையறைக்கு அருகில் தங்குமிடத்தை பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பிரமாண்டமான குடும்பம் அவர்களது பெரிய டைனிங் ஹாலில் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் எனவும், அந்த வீட்டில் அனைவருக்கும் சேர்த்து ஒரே சமையலறைதான் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் ஒருதடவை உணவுக்காக 30 கிலோ கோழியும், 60 கிலோ உருளைக் கிழங்கும், 100 கிலோ அரிசியும் சமைக்கப்படுவதாகவும் ஓர் அரிய தகவல் கிடைக்கிறது. எனினும், தாம் வாழ்ந்த காலத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரிடத்திலும் ஒரேமாதிரியான அன்பு, நம்பிக்கையையும், அனைவரிடமும் ஒற்றுமையை கடைப்பிடித்து வந்துள்ளார், ஜியோனா. ’தாம் தொடர்ந்து திருமணம் செய்துகொள்வது குறித்து குடும்பத்தில் எந்தச் சண்டையும் ஏற்படவில்லை’ என்று தமது பேட்டிகளில் அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்தலமாக மாறிய ஜியோனாவின் இருப்பிடம்

திருமணம் குறித்து 2011ஆம் ஆண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ’நான் எனது குடும்பத்தை விரிவுபடுத்தத் தயாராக இருக்கிறேன். திருமணம் செய்துகொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறேன். என்னைக் கவனித்துக்கொள்ள நிறைய பேர் உள்ளனர். நான் என்னை ஓர் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வளவு பெரிய குடும்பத்தை வழிநடத்திய ஜியோனா, அதற்கேற்ற இடவசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இவர்களுடைய குடும்பம் வசிப்பதற்காக மட்டும் 4 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு இருக்கிறது. அதில் மொத்தம் 100 அறைகள் உள்ளன. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டைப் பார்த்தால் ஏதோ அடுக்குமாடி குடியிருப்பு போன்றும், அங்கு 10, 15 குடும்பங்கள் வசிப்பதுபோலவும் தோற்றமளிக்கும்.

இப்படி, உலகின் மிகப்பெரிய குடும்பம் என்று கருதப்படும் ஜியோனா, குடும்ப உறுப்பினர்களில் இரட்டைச் சதம் அடிக்க வேண்டிய நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக, சிகிச்சை பலனின்றி மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ட்ரினிட்டி மருத்துவமனையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 76. இறக்கும்வரை அவரது அனைத்து மனைவிகள், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில்தான் ஜியோனா வசித்து வந்தார். அவர் வசித்த இடம், இன்றும் ஒரு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியிருக்கிறதுதான் இன்னொரு ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.