வேலையில்லா இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் விமர்சித்ததற்கு எதிராக எழுந்த இந்த இயக்கம், சமூக வலைதளத்தில் வெறும் நகைச்சுவைப் பக்கமாகத் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற அமைப்பு இன்று நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக இவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிகாரத்தை நோக்கிக் கேள்வி எழுப்பி, முதல்முறையாக இந்திய வரலாற்றில் எழுச்சிகரமான இளைஞர் படையை உருவாக்கிய இந்த அமைப்பின் வெற்றிக்குப் பின்னால் அபிஜித் தீப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகிய இளைஞர்களின் பங்கு முக்கியமானது.
இதில் தமிழில் அடிக்கடி செய்தியாளர் சந்திப்புகளை நிகழ்த்தும் சௌரவ் தாஸ் தமிழர் என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். உண்மையில் சௌரவ் தாஸ் யார்? அவரது பின்னணி என்ன என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
27 வயதான சௌரவ் தாஸ் புதுச்சேரியைப் பூர்விகமாகக் கொண்டவர். பெங்களூருவில் பிறந்து வளர்ந்து டெல்லியில் குடிபெயர்ந்திருந்தாலும், தமிழ்க் குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்பதால் தமிழிலும் சரளமாகப் பேசக்கூடியவர். தற்போது ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அமைப்பின் செய்தித் தொடர்பாளராக, பத்திரிகையாளர் சந்திப்புகளில் மாணவர்களின் குரலாக ஒலிப்பதுடன், மத்திய கல்வித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நடைபெற்ற அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு கோரிக்கைகளை முன்வைத்தார். சௌரவ் தாஸ் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2016-2019ஆம் கல்வியாண்டில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பட்டம் பெற்ற பிறகு சில நிறுவனங்களில் பணியாற்றிய சௌரவ், தற்போது இன்டிபென்டென்ட் ஜர்னலிஸ்ட் ஆக பிரபல பத்திரிகைகளில் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) மிகத் திறம்படப் பயன்படுத்தி, அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். புகழ்பெற்ற பத்திரிகைகளில் மனித உரிமைகள் மற்றும் அரசுக் கொள்கைகள் குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது புலனாய்வு எழுத்துக்காக சர்வதேச அளவில் மதிப்பிற்குரிய புலிட்சர் மையத்தின் மானியத் தொகையைப் பெற்றிருக்கிறார். ‘Complicit Silence: The Court's Role in India's Quiet Suffering’ என்ற புத்தகத்தையும் இவர் தற்போது எழுதி வருகிறார். சமீபத்தில் நடிகையும் மாநிலங்களவை உறுப்பினருமான கங்கணா ரணாவத், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக சௌரவ் தாஸ் தொடர்பாக பயனற்றவர் மற்றும் வேலையில்லாதவர் என்று அவர் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தின. இதையடுத்து, சௌரவ் தாஸின் பின்னணி குறித்து இணையத்தில் தேடல்கள் அதிகரித்துள்ளன.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர