நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு நாளை தொடங்குகிறது. டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூட்டத்தொடரின் முதல் அமர்வு 11ஆம் தேதி நிறைவுபெற்றது. இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள 2ஆவது அமர்வில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க உள்ளார். மொத்தம் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் பேசுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இதனிடையே, டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே, மாநிலங்களவையில் காலியாக உள்ள 55 இடங்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்களில் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், கட்சியின் முக்கிய தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், ஏகே அந்தோணி, அகமது படேல், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.