இந்தியா

இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் கிரானைட் சிலை நிறுவப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

EllusamyKarthik

டெல்லி இந்தியா கேட் பகுதியில் விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரானைட்டால் செய்யப்பட்ட பெரிய சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த சிலையின் பணிகள் நிறைவுபெறும் வரை நேதாஜி சிலை அமைய உள்ள இடத்தில் அவரது ஹாலோகிராம் சிலை இடம்பெறும். இதனை நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியன்று பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். 

இந்த சிலை 28 அடி X 6 அடி என்ற அளவில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் சிலை நிறுவப்படுவதை அவரது உறவினரும், பாஜகவை சேர்ந்தவருமான சந்திர குமார் போஸ் வரவேற்றுள்ளார். 

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்ஷி, பிரதமர் மோடி அரசின் முடிவை வரவேற்றுள்ளார். பல தசாப்தங்களாக நேதாஜியின் புகழ் இந்த நாட்டில் புறக்கணிக்கப்பட்டு இருந்ததாக அவர் சொல்லியுள்ளார். 

நேதாஜியை மையமாக வைத்து அமைக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தின் குடியரசு தின விழா அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.