ஸ்டார்டப் மாதிரி படம் புதியதலைமுறை
இந்தியா

”ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்க நினைப்பவர்கள் வெளிநாட்டிற்கு ஓடிவிடுங்கள்” - சர்ச்சையான பதிவு

இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தோற்றுவித்து அதை வெற்றிகரமாக நடத்திவரும் ஒருவர், தனது Reddit இடுகையில் பதிந்த பதிவுதான் தற்பொழுது பூதகரமாக பரவி வருகிறது.

Jayashree A

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு காலூன்றி வெற்றி பெருவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல.. அப்படி இந்தியாவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தோற்றுவித்து அதை வெற்றிகரமாக நடத்திவரும் ஒருவர், தனது Reddit இடுகையில் பதிந்த பதிவுதான் தற்பொழுது பூதகரமாக பரவி வருகிறது. அப்படி என்ன அவர் பதிவிட்டார்? வாங்க பார்க்கலாம்.

இந்தியாவில் பொறியியல் பட்டம் பெற்று அமெரிக்காவில் மேற்படிப்பைத் தொடர்ந்த ஒருவர் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்க 2018 இல் இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர் ஒருதொழிலைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். அவரது நிறுவனத்தில் சராசரியாக ₹ 15 லட்சம் சம்பளத்தில் 30 பேர் பணியாற்றும் நிலையில் தனது அனுபவங்களை தொழில்முனைவோர் Reddit இல் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரது பதிவில், தொழில்முனைவோர் காய்கறி விற்பனையாளர்கள், வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உணவக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, வெறுப்பை எதிர்கொண்டதாகக்கூறினார். மேலும், ”புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கும் எண்ணம் கொண்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். இங்கு வரி விதிப்பு, நேரவிரயம் அதிகம்! வெற்றிகரமான தொழிலை நடத்துபவர் என்ற முறையில் நான் இதைச் சொல்கிறேன்! இங்கு குறைந்த பணி நெறிமுறைகள் உள்ளது. நீங்கள் பணக்காரர்களாகத் தெரியவில்லை அல்லது பிராண்டட் ஆடைகளை அணியவில்லை என்றால், நீங்கள் அழுக்கு போல் நடத்தப்படுவீர்கள்” என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருந்ததுடன், பயங்கரமான பொருளாதார சரிவு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவைகளையும் குறிப்பிட்டு இருந்தார்,

அப்படி, புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்வதை பரிசீலிக்க வேண்டும் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அவரது பதிவானது விரைவாக பலரின் கவனத்தை ஈர்த்தது மற்றும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அப்பதிவானது தற்பொழுது நீக்கப்பட்டு இருந்தாலும், இவரின் பதிவானது பேசுப்பொருளாகி வருகிறது.

இருப்பினும் யார் அந்த தொழிலதிபர்? எதற்காக இப்பதிவைப்போட்டார் என்ற விவரம் ஏதும் தெரியவரவில்லை