மக்களவை தேர்தல் குறித்த பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ''நாம் செய்துகாட்டுவோம். நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வாக்களிப்பது குறித்து பல தளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி மக்களவை தேர்தலில் வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை படைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மோகன்லால், நாகர்ஜூனா, சல்மான் கான், அமீர் கான், ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் மகாதேவன், பி.வி.சிந்து, சாய்னா நேவல், சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு தனித் தனியாக வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடி ட்விட் செய்தார். அதில், வரும் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் வாக்களிப்பது என்பது உரிமை மட்டும் அல்ல; கடமையும் கூட எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ''நாம் செய்துகாட்டுவோம். நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.