free travel for men X
இந்தியா

ஆண்களுக்கு இலவச பயணம்.. களமிறங்கிய தனியார் பேருந்து! இந்த முடிவுக்கு காரணம் என்ன?

பெண்களுக்கு இலவச பயண அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் ஆண்களுக்கு இலவச பயண அறிவிப்பை வெளியிட்டு அதிரவைத்துள்ளார்.

Praveen Joshva L

கேரளத்தில் இடதுசாரிகளின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியிலேயே பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததும் 'பிரியதர்ஷினி' (Priyadarshini Scheme) என்ற பெயரில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அதே போல பெண்களுடன் சேர்த்து திருநங்கைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த முடிவுக்கு கேரளாவை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் மட்டும் ஆண்களுக்கு இலவச பேருந்து வசதியை ஒரு பஸ் உரிமையாளர் வழங்கியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

'லிட்டில் ஃப்ளவர்' (Little Flower) என்ற பேருந்தின் உரிமையாளரான டேவிஸ் என்பவர், தனது பேருந்தில் ஆண்கள் ஒரு நாள் முழுவதும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளார். மேலும், அரசின் இலவசச் சேவையைத் தவிர்த்துத் தனது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இலவசப் பயண வசதியைப் புறக்கணித்துவிட்டு எங்கள் பேருந்துகளில் தொடர்ந்து பயணிக்கும் பெண் பயணிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றும், அரசின் முடிவால் தனியார் பேருந்து உரிமையாளர்களின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவே இந்தத் தனிப்பட்ட முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.