நாட்டில் சராசரியாக 663 பொதுமக்களுக்கு ஒரு போலீஸ் என்ற அடிப்படையில் காவல்துறையினர் உள்ள நிலையில், ஒரு விஐபிக்கு 3 காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 109 விஐபிக்களுக்கு 228 காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதாக அதில் தெரிய வந்துள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு 192 காவலர்கள் பணியில் இருப்பதாகவும், நாடு முழுவதும் மொத்தம் அனுமதிக்கப்பட்ட காவலர் எண்ணிக்கை 24 லட்சத்து 64 ஆயிரம் என்ற நிலையில், சுமார் 5 லட்சம் காவலர்கள் குறைவாக இருப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதிகபட்சமாக பீகாரில் 3 ஆயிரத்து 200 விஐபிக்களுக்கு தலா 3 காவலர்கள் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், லட்சத்தீவில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் அளவிற்கு விஐபி யாருமில்லை என்றும் தெரிய வந்துள்ளது.