aves up to ₹55,000 annually using 21 credit cards Credit Card Usage
இந்தியா

கிரெடிட் கார்டு மூலம் லாபம்.. ஆண்டுக்கு ரூ.50,000 சேமிப்பு.. SECRET சொல்லும் எழுத்தாளர்!

21 கிரெடிட் கார்டுகளை வைத்து ஆண்டுக்கு 55 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கும் நபர், அதற்கான ரகசியம் குறித்து கூறியுள்ளார்.

Praveen Joshva L

கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டைகள் என்பது ஒருகாலத்தில் பணக்காரர்களுக்கானது என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர் பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் பலர் கிரெடிட் கார்டுகள் மூலம் தாங்கள் செலவு செய்த பொருள்களுக்கு பணம் செலுத்த முடியாமல் கூடுதல் வட்டி தொகையை செலுத்த வேண்டிய நிலையும் உருவாகிறது.

தற்போதைய நிலையில் பல்வேறு கிரெடிட் கார்டு நிறுவனங்களும் ஏராளமான ஆஃபர்களை அள்ளித்தரும் நிலையில், அதனை ஒரு சிலரே சிறப்பாகவே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரணவ் சகதேவ் (Pranav Sakhadeo) என்ற எழுத்தாளர் 21 கிரெடிட் கார்டுகளை வைத்து ஆண்டுக்கு 50 ஆயிரம் வரை சேமித்து வருவதாக கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கூறியுள்ள அவர், மாதத்தின் தொடக்கத்தில் மாத செலவுகள் குறித்து மனைவியிடம் ஆலோசித்து அதற்கு ஏற்ப செலவை திட்டமிடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் அந்தந்த கார்டுகளுக்கு கிடைக்கும் ஆஃபர்களை பொறுத்து மளிகைப் பொருட்களுக்கு ஒரு கார்டு, ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு ஒரு கார்டு, எரிபொருள் நிரப்ப ஒரு கார்டு, பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு ஒரு கார்டு என பிரித்து செலவு செய்வதாக கூறியுள்ளார்.

அதோடு அனைத்துச் செலவுகளையும் அதற்குரிய சரியான கார்டு மூலம் செய்வதால், அதிகப்படியான கேஷ்பேக் மற்றும் ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும் என்றும், அதனை வேறு பொருள்கள் வாங்க பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே போல செல்போன், லேப்டாப் போன்ற பொருள்களை வாங்க திட்டமிட்டால் பண்டிகைக் காலங்களில் அல்லது ஆன்லைன் தளங்களில் குறிப்பிட்ட வங்கியின் கார்டுகளுக்கு 10% உடனடித் தள்ளுபடி தருவார்கள் என்றும், தன்னிடம் 21 கார்டுகள் இருப்பதால், எந்த வங்கி சலுகை தந்தாலும் அதனை பயன்படுத்தி தேவையான பொருளை வாங்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

தன் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ, அந்த அளவிற்கு மட்டுமே கிரெடிட் கார்டில் செலவு செய்வேன் என்று கூறியுள்ள அவர், ஒவ்வொரு மாதமும் பில் வந்தவுடன் முழுத் தொகையையும் நிலுவையின்றிச் செலுத்திவிடுவதால் கிரெடிட் கார்டுக்கு வட்டி தொகை வருவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இப்படி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 55 ஆயிரம் ரூபாய் வரை மிச்சம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் இது போன்ற செயல்களுக்கு நிதி மேலாண்மை மிக முக்கியம் என்றும், அதனை செய்யத்தவறினால் மீள முடியாத கடனில் சிக்க வழிவகை ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.