மத்தியப்பிரதேசத்தில் நான்கு மாதக் குழந்தையை கொன்றவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு மத்தியப் பிரதேச மாநில இந்தூரை சேர்ந்த பலூன் வியாபாரி தனது 4 மாத மகள் மற்றும் மனைவியுடன் ராஜ்வாடா ஃபோர்ட் பகுதியிலுள்ள சாலையில் படுத்து உறங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தனது 4 மாத குழந்தை காணவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கடை நடத்தும் ஒருவர் தனது கடையின் கீழ்த்தளத்தில் குழந்தை சடலமாக இருப்பதைக் கண்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பலூன் வியாபாரியின் குழந்தை என தெரிய வந்தது. குழந்தையின் உடலில் காயம் இருந்தது. ஆகவே பாலியல் வன்புணர்வுக்கு குழந்தை ஆளாகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் காலை 4.45 மணிக்கு ஒரு வாலிபர் குழந்தையை தனது தோளில் தூக்கிக்கொண்டு கடையின் கீழ்தளத்திற்கு செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்ததில் அந்த இளைஞர் இரவில் பலூன் வியாபாரி உறங்கிய இடத்திற்கு அருகில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அந்த இளைஞரின் பெயர் சுனில் என்பது தெரியவந்தது.இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வழக்கு இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்தது. சிறார்களை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை விதிக்கும் ஷரத்து மட்டுமே இருந்தது. காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த விவகாரத்துக்கு பின் போக்சோ சட்டத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்கும் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து அமலுக்கு வந்துள்ளது.