இந்தியா

”ஒருவேளை இன்ஜினியரா இருப்பாரோ” - தவறவிட்ட airpod-ஐ சாமார்த்தியமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

JananiGovindhan

இந்தியாவின் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அவ்வப்போது வித்தியாசமான, ஆச்சர்யமளிக்கக் கூடிய செயல்கள் நடைபெறுவதும் அது சமூக வலைதளங்களில் PeekBengaluru என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பகிரப்படுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.

அந்த வகையில், ஆட்டோவில் சென்ற ஒரு பெண்ணின் airpod அரை மணிநேரத்திற்குள் அவரிடமே ஒப்படைக்கப்பட்ட சம்பவம் குறித்த ட்வீட்தான் தற்போது நெட்டிசன்களின் கமென்ட்ஸ்களுக்கு தீனி போட்டிருக்கிறது என்றே கூறலாம்.

ஷிதிகா என்ற பெண் பெங்களூரு நகரில் வசித்து பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவுதான் தற்போது வைரலாகியிருக்கிறது. அதில், அலுவலகத்துக்கு ஆட்டோவில் சென்ற போது அதில் தன்னுடைய airpod-ஐ தவறவிட்டதாகவும் அதனை ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக அடுத்த அரை மணிநேரத்தில் கொண்டு வந்து ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்படி, ஆட்டோவில் தவறவிட்ட airpod-ஐ எடுத்து முதலில் தன்னுடைய மொபைலில் pair செய்து பார்த்து யாருடையதாக இருக்கும் என அதில் இருக்கும் பெயரை கண்டுபிடித்த ஆட்டோ ஓட்டுநர், பின்னர் phonepe பரிவர்த்தனையை ஆய்வு செய்து அந்த பெண்ணின் செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். அதன் பிறகு அந்த airpod-ஐ பெண் வேலை செய்யும் அலுவலகத்துக்கே சென்று செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஷிதிகாவின் பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும் “கண்டிப்பாக அந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு இன்ஜினியரிங் படித்தவராகவே இருக்க வேண்டும் அல்லது டெக்னாலஜி குறித்த ஆர்வமுடையவராகவே இருக்க வேண்டும்” என்று கமென்ட் செய்திருக்கிறார்கள்.