இந்தியா

உ.பி.அரசு சாதி முத்திரையுடன் ராமாயணத்தை எழுத முயற்சிக்கிறது: சிவசேனா சாடல்!

webteam

ஹனுமன் சாதியை கண்டுபிடிக்க முயல்வது முட்டாள்தனமானது என்று சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஐந்து மாநில தேர்தலின் போது, ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹனுமன் ஒரு வனவாசி, அவர் ஒரு தலித் என தெரிவித்திருந்தார். இந்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்த பிராமண சபை அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் தேசிய பழங்குடியின தலைவர் நந்தகிஷோர் சாய், ஹனுமன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் உ.பியை சேர்ந்த பாஜக கவுன்சிலரான புக்கல் நவாப், ஹனுமன் முஸ்லிம் என கூறியுள்ளார். இந்நிலையில் பா.ஜ.க கூட்டணி கட்சியான சிவசேனா ஹனுமனின் சாதி பற்றி பேசுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. 

அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், ‘’இந்த விவாதம் தேவையற்றது, அர்த்தமற்றது. உத்தரப்பிரதேச அரசு புதிய ராமாயணத்தை, முக்கியமான பாத்திரங்களுக்கு சாதி முத்திரையுடன் எழுத முயற்சிக்கிறது. அயோத்தியில் ராமர் கோவிலை இன்னும் கட்டவில்லை. ஆனால் விசுவாசம் மற்றும் பக்தியின் வடிவமான ஹனுமனின் சாதி பற்றி பா.ஜ.க விவாதத்தை தொடங்கியுள்ளது. இது முட்டாள் தனமானது. இதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தலில் ஏற்க னவே மூன்று மாநிலங்களை இழந்துவிட்டீர்கள். இது போதாதா? ’’ என்று கூறியுள்ளது.