சிறுவனின் தாய்   சாரின்
சிறுவனின் தாய் சாரின்  PT WEB
இந்தியா

“அம்மா கூட போக மாட்டேன்” - வெளிச்சத்துக்கு வந்த தாயின் கொடூரச் செயல் - காயங்களுடன் குழந்தை மீட்பு!

விமல் ராஜ்

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பெங்களூரு கிரிநகர் அருகே வீரபத்ரநகரில் வசித்து வருபவர் சாரின். இவர் தனது கணவருடன் சேர்ந்து வாழப் பிடிக்காமல் பிரிந்து தனது 3 வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த குழந்தையை சாரின் வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குழந்தைக்குச் சாப்பிடுவதற்கு உணவு கொடுக்காமல் கொடூரமாகத் தாக்கியதாகத் கூறப்படுகிறது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.

சாரின் தனது குழந்தையை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள், மற்றும் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு வெளியே தெரியவந்துள்ளது. இதையடுத்து, சாரின் வீட்டுக்குச் சென்ற அவர்கள், அறையில், அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 வயதுக் குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். அப்போது சாரின் அவர்களுடன், தகராறில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, சாரினிடம், அவர்கள் விசாரித்த போது, "எனது குழந்தையைச் சித்ரவதை செய்யவில்லை. குழந்தை பொய் சொல்கிறது” எனத் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த பெண்கள், குழந்தையின் உடலில் இருந்த காயங்களை அவரிடம் காண்பித்து கேட்ட போது, குழந்தை நன்றாக வளர வேண்டும் என்பதால் அடித்து, தாக்கியதாக சாரின் கூறியுள்ளார்.

பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த, போலீசார் வருடம் நடத்திய விசாரணையில், சாரினுக்கும் சங்கர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கணவன் மது போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார். தான் வேலைக்குச் செல்லும் போது குழந்தையை வீட்டின் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து விட்டுச் செல்வது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன்

மேலும், தினந்தோறும் மதியம் சாரின், தனது ஆண் நண்பரை வீட்டுக்கு அனுப்பி குழந்தைக்கு உணவு வழங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த குழந்தை நலப் பாதுகாப்பு அதிகாரிகள், "குழந்தையைச் சரியாகப் பார்த்துக் கொள்வோம் என்று கூறினால் மட்டுமே ஒப்படைப்போம்; இல்லையெனில் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து விடுவோம்" என் சாரினிடம் தெரிவித்தனர்.

பின்னர், குழந்தையிடம் "அம்மாவிடம் செல்கிறாயா" எனக் குழந்தை நலப் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டபோது, தாயுடன் செல்ல மறுத்து விட்டதால், பாதுகாப்பு மையத்திற்குக் குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. சாரினுக்கு முறையான, கவுன்சிலிங் நடத்தப்பட்டு, அதன்பிறகு தான் குழந்தையை அவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், சாரின் ஆண், நண்பரும் குழந்தையைத் தாக்கியது தெரியவந்துள்ளது. வீட்டுக்குச் சாப்பாடு கொடுக்க வரும் போது, "அந்த மாமா என்னை குக்கரால் தாக்கினார்” என அந்த குழந்தை தெரிவித்த சம்பவம் காண்போரைக் கண்கலங்கச் செய்தது.