கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவரின் உடல் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டது.
கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் அடிமாலி, முருங்காசேரி, இடுக்கி பகுதிகளில் நடந்த நிலச்சரிவுகளில் சிக்கியும், மரம் விழுந்தும், வீடு இடிந்தும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டாற்று வெள்ளத்துடன் வரும் நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 10 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இடுக்கி உப்புத்தோடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்றுபேர் தங்கிடிருந்த வீடு ஒன்று அடித்துச்செல்லப்பட்டது. அதில் மூவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில், பொதுமக்களே அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப்பின் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அய்யப்பன் என்பவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதோடு இடுக்கி மாவட்டத்தில் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக கருதப்படும் 10 பேரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோரை தேடும் பணி நடந்து வருகிறது.