இந்தியா

“என்ன நடக்கிறது உத்தரப் பிரதேசத்தில்?” - பத்திரிக்கையாளர் மரணத்திற்கு மம்தா கண்டனம்

EllusamyKarthik

உத்தரப்பிரதேசத்தில், சட்டவிரோத மதுபான கும்பல் குறித்த செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம், கங்கா பகுதியில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றியவர் பிரதாப்கர் சுலப் ஸ்ரீவத்சவா. இவர் அப்பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான கும்பல் குறித்த செய்தியை அண்மையில் வெளிக்கொணர்ந்தார். இதையடுத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்புக் கேட்டு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார் ஸ்ரீவத்சவா.

இந்த நிலையில் சனியன்று நிகழ்ந்த சாலை விபத்தில் ஸ்ரீவத்சவா மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் சென்ற இருசக்கர வாகனம் மழையில் நனைந்திருந்த சாலையில் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஸ்ரீவத்சவா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

“என்ன நடக்கிறது உத்தரப் பிரதேசத்தில்? செய்தியாளர் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என மம்தா பானர்ஜி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.