கனிமொழி - நிர்மலா சீதாராமன்
கனிமொழி - நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறை
இந்தியா

மக்களவையில் மகாபாரதம்! கனிமொழி Vs நிர்மலா சீதாராமன் பேசியவை என்ன? #Video

webteam

“குற்றம் நடக்கும் போது வேடிக்கை பார்த்தவர்களும் தண்டனைக்குரியவர்களே!” - எம்.பி. கனிமொழி

நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீதான விவாதத்தின்போது பேசிய எம்.பி. கனிமொழி, “மகாபாரதத்தில் திரௌபதியைப் பற்றி குறிப்பிட்டார்கள். அவரும் துகிலுறிக்கப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார். மணிப்பூர் பெண்களும் அப்படித்தான் தங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தார்கள். மகாபாரத்தில் கிருஷ்ணர் வந்தார். ஆனால் மணிப்பூரில் கடவுளும் வரவில்லை, அரசும் காப்பாற்றவில்லை.

kanimozhi

மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டதன்படி அந்த குற்றத்தை செய்தவர்கள் மட்டும் அல்ல, குற்றத்தை வெறும் பார்வையாளர்கள்போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட தண்டிக்கப்பட்டார்கள். அதேபோல் ஹத்ராஸ், கத்வா, உனாவ், பில்கிஸ் பனோ, மல்யுத்த வீராங்கனைகளை வேடிக்கை பார்த்தவர்களும் இந்திய பெண்களால் தண்டிக்கப்படுவார்கள்” என்று பேசினார்.

“1989-ல் திமுக என்ன செய்தது நினைவிருக்கிறதா?” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கனிமொழிக்கும் இந்த அவைக்கும் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி நடந்த ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அன்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்தவர்களால், அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டது. அதைக்கண்ட திமுக உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர், கேலி செய்தனர். நீங்கள் கவுரவர் சபையை பற்றியும் திரௌபதியைப் பற்றியும் பேசுகிறீர்களா?

nirmala sitharaman

திமுகவினர் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தினர். அப்போது ஜெயலலிதா, ‘முதல்வராகாமல் மீண்டும் இந்த அவைக்கு வரமாட்டேன்’ என்று உறுதி எடுத்தார். தனது உறுதியை நிரூபித்து 2 ஆண்டுகளில் அதே சட்டசபைக்கு முதலமைச்சராக வந்தார் ஜெயலலிதா. அன்று அந்த அவையில் மௌனம் காத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்தானே” என்றார். இதையடுத்து இந்த விவாதம் காரசார விவாதமாக மாறியது. ஏற்கெனவே சிலப்பதிகாரம், ராமாயணம் உள்ளிட்டவையும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கோள் காட்டி பேசப்பட்டது.