நம்பவே முடியவில்லைதான். ஒரு ரூபாய்க்கு யாராவது சாப்பாடு கொடுப்பார்களா என்ற ஆச்சரியக் கேள்விக்கு பதிலாக இருக்கிறது டெல்லியின் நங்கோலாய் பகுதியில் உள்ள ஸ்யாம் ரஸோய் உணவகம். இங்குதான் நண்பகல் 11 மணி முதல் ஒரு மணி வரையில் மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு மதிய உணவு பரிவுடன் பரிமாறப்படுகிறது.
மதிய உணவு நேரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அந்த உணவகத்துக்கு வந்துவிடுகிறார்கள். அதன் உரிமையாளர் பிரவீன் கோயல், " மக்கள் கருணையுடன் நிதியுதவி செய்கிறார்கள். ஆரம்பத்தில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம். இன்னும் அதிக மக்களுக்குச் செய்யவேண்டும் என்பதற்காக ஒரு ரூபாயாக குறைத்தோம். ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர் சாப்பிட்டுவருகிறார்கள்" என்றார்.
தினமும் பார்சல் மூலம் ஆயிரம் முதல் 1100 பேருக்கு உணவு வழங்கிவருகிறார்கள். இந்தர்லாக், சாய் மந்திர் பகுதிகளுக்கு பார்சல்கள் இ ரிக்சா மூலம் அனுப்பப்படுகின்றன. மொத்தமாகப் பார்த்தால் 2 ஆயிரம் சாப்பாடுகள் விற்பனையாகின்றன.
ஸ்யாம் ரஸோய் என்ற உணவத்தை 32 மாதங்களாக நடத்திவருகிறார். மக்கள் அளிக்கும் நன்கொடை மூலம் அவரால் ஒரு ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கமுடிகிறது. சிலர் நிதியுதவி அளிப்பதுடன் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவுகிறார்கள். பலரும் உதவி செய்தால்தான் தன்னால் தொடர்ந்து இப்படி சேவை செய்யமுடியும் என்று உறுதியளிக்கிறார் பிரவீன் கோயல்.
இந்த உணவகத்தால் உள்ளூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். " வெறும் ஒரு ரூபாயில் நான் சாப்பிட்டுவருகிறேன். உண்மையில் சுவையும் அருமையாக இருக்கிறது. உடலுக்கும் நல்லதாக இருக்கிறது. குழந்தைகள்கூட இங்கு சாப்பிடுகிறார்கள்" என்கிறார் உணவக வாடிக்கையாளரான நரேந்தர்லால் சர்மா.