கோவிலுக்குள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் நுழைந்ததற்காக பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்திலுள்ள மியாபுரா கிராமத்தில் ஒரு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நுழைய பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது வழக்கமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 4 வயது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கோயிலுக்கு சென்றுள்ளார்.
கோயிலுக்கு வெளியே நின்று மகனுக்காக பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தபோது, அந்த சிறுவன் கோயிலுக்குள் ஓடிவிட்டுத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட கோவில் அர்ச்சகர் மற்றும் கிராமத்தின் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கிராமக் கூட்டத்தை கூட்டி சிறுவனின் பெற்றோருக்கு ரூ. 25,000 அபராதமும், கோவிலை சுத்தம் செய்ய ரூ. 10,000 என மொத்தம் ரூ. 35,000 அபராதம் விதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த கொப்பல் மாவட்ட நிர்வாகம், மியாபுரா கிராமத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து காவல்துறையினர் 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரா தெரிவித்துள்ளார். மேலும், கிராமவாசிகளுக்கு தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.