இந்தியா

கை நடுக்கத்துடன் 98 வயதில் சிறையிலிருந்து விடுதலையான முதியவர்... வைரலாகும் வீடியோ!

நிவேதா ஜெகராஜா

98 வயதாகும் ராம் சூரத் என்ற நபர், உ.பி.யின் அயோத்திய சிறையில் இருந்து தனது 5 ஆண்டுகால சிறை தண்டனைக்குப்பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். இம்முதியவர் இந்திய அரசியலமைப்பு 452, 323 மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

தள்ளாடும் வயதில் இவர் விடுவிக்கப்பட்டிருப்பதால், இவரது விடுதலை நாளில் இவருக்கு சிறை அலுவலர்கள் சார்பில் மாலை அணிவித்து பிரிவு உபசார விழா நடைபெற்றிருக்கிறது. மிகுந்த பாரத்தை சுமந்துக்கொண்டு, கைகள் அனைத்தும் நடுநடுங்க அம்முதியவர் செல்லும் வீடியோ காட்சிகளை உ.பி சிறை டி.ஜி பகிர்ந்திருந்த நிலையில், அவை தற்போது வைரலாகி வருகின்றன.

இவர் கடந்த ஆண்டு ஆக. 8-ம் தேதியே விடுதலை செய்யப்பட இருந்தார். ஆனால் மே 20, 2022-ல், கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டதால் அப்போது 90 நாள்களுக்கு அவருக்கு பரோல் வழங்கப்பட்டிருந்தது. இக்காரணத்தால் அவரது விடுதலை மேலும் தாமதமானதாக சொல்லப்படுகிறது.

ட்விட்டரில் காவலர்கள் வெளியிட்டுள்ள வீடியோவின் கேப்ஷன்மூலம், ரிலீஸான ஸ்ரீ ராம் சூரத்தை விடுதலை நாளில் அழைத்துச்செல்ல யாரும் வரவில்லை என்பது தெரியவந்துளது. இதனாலேயே மாவட்ட கண்காணிப்பாளர் ஷஷிகாந்த் மிஷ்ரா அவரை காரில் வழியனுப்பியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், 98 வயதான ஒருவரை சிறையில் அடைத்திருந்தது விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றது.