ஆன்லைன் வழிக் கல்வியைப் பெறுவதற்கு 94 சதவீத மாணவர்களிடம் இன்டர்நெட் வசதி இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக ஸ்மார்ட்போன் அல்லது இன்டர்நெட் வசதி பெற்றுள்ளனரா என்பது தொடர்பாக குழந்தைகள் உரிமை அமைப்பான ‘கிரை’, கடந்த மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சுமார் 6 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
அதில் 94 சதவீதம் மாணவர்களிடம் இணையதள வசதி இல்லை என்றும், பலரிடம் அதற்கான ஸ்மார்ட்போன்கள் வசதி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 1740 பேரில் வெறும் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்த வருமானம் மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் என்பது ஒரு ஆடம்பர பொருளாகவே இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.