இந்தியா

ட்ரெண்டாகும் ‘90s Kids Rumors’! பால்யகால நினைவுகளை கொஞ்சும் ட்வீட்ஸ்!

webteam

நவீன உலகில் அன்றாடம் ஏதோ ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை கைக்குள் போட்டு கொள்கின்றன. கடந்த மாதம்தான் 10 Year Challenge ஹேஷ்டேக் உலகளவில் பெரிதளவு ட்ரெண்டானது. அதில் சினிமா பிரபலங்களில் இருந்து கிரிக்கெட் பிரபலங்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் அவர்களின் தற்போது உள்ள புகைப்படத்தோடு 10 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி மகிழ்ந்தனர். அதை கடக்கும் சமயத்தில் மற்றொரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. ஆம்,  #90sKidsRumors!  இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்தது என்பது மற்றொரு சிறப்பு!

90ஸ் கிட்ஸ்... 90ஸ் கிட்ஸ் என்றதும் பலருக்கு பளிச்சென்று பல் தெரியும். ஆனந்த புன்னகை வெளிவரும். நீங்களும் 90ஸ் கிட்டா? நானும் அதேதான் என்று பலர் ஹைஃபை போட்டுக்கொள்வார்கள். என்னதான் 90ஸில் பிறந்தவர்கள் இனியேனும் கிட்ஸ் இல்லை என்பது கசக்கும் உண்மை என்றாலும், அந்த உண்மையை 90ஸ் கிட்ஸ் மனம் ஏற்க சற்றே தயங்குகிறது. ஏனெனில், எந்த டிக்கேடில் பிறந்தவர்களும் தொன்னூறுகளில் பிறந்தவர்கள் போல் பிரபலமாகவில்லை என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையல்ல. 

90ஸ் கிட்ஸ் என்றாலே கெத்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் பிறந்த பாக்கியசாலிகள், சமூக வலைதளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றளவில் மறக்கப்பட்ட பல ஸ்வாரசிய விஷயங்களை அனுபவித்தவர்கள்  என தங்களின் எதார்த்தத்தை எப்போதும் மிகைப்படுத்தாமல் சொல்லிக்கொல்வதில் கில்லாடிகள் என்றும் சொல்லலாம்.

இதற்கிடையே, தற்போது ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் பெரிதும் ட்ரெண்டாகி வருகிறது. அது என்னவென்றால், 90களில் பிறந்தவர்கள் தங்கள் சிறு வயதில் நம்பப்பட்ட வதந்திகளை #90sKidsRumors என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து 2000 கிட்ஸை தலை கிறுகிறுக்க செய்து வருகின்றனர். இதை பார்க்கும் 90 கிட்ஸ்களோ மனம் துள்ளலோடு தங்கள் குறும்பு காலங்களை நினைவு கூறிவருகின்றனர்.

‘90ஸ் கிட்ஸ்’களால் நம்பப்பட்ட சில வதந்திகள்... நீங்கள் 90ல் பிறந்தவராக இருந்தால் இவை கண்டிப்பாக உங்கள் கண்முன் நினைவுகளை தூவிச்செல்லும்.

காக்கா கத்துன்னா வீட்டுக்கு சொந்தக்காரங்க வருவாங்க...

தர்பூசணி பழத்தில் இருக்கும் கொட்டையை விழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் முளைக்கும்... 

நிலாவில் பாட்டி வடை சுடுகிறார்.. 

புத்தகத்தில் மயில் றெக்கையோடு அரிசி போட்டு வைத்தால் றெக்கை குட்டி போடும்!

மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்தால் சக்திமான் பறந்துவந்து காப்பாற்றுவார்!

தலையில் இரண்டு சுழி இருந்தால் இரண்டு திருமணம் செய்வீர்கள்...

‘அண்டர்டேக்கருக்கு 7 உயிர் டா’ என பள்ளியில் நண்பர்கள் சொல்ல கேட்டிருப்போம்!

இதில் ஹைலைட்டான வதந்தி: 

முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும்! (இது இன்னும் சில முரட்டு சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் நம்புகிறார்கள் என்ற வதந்தியும் பரவலாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்).

இப்படி பல வதந்திகளை பதின்பருவத்தில் சீரியஸாக நம்பி, வளர்ந்தபின் அதை நினைத்து மனம் மகிழும் 90ஸ் கிட்ஸ்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம்.

என்னதான் 90களில் பிறந்தவர்கள் வேலை, திருமணம் என பலர் செட்டிலாகி இருந்தாலும், 90 நினைவுகள் அவர்களை பின்னிப்பிணைந்திருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு முறையாவது தங்கள் பள்ளி பருவத்திற்கு மீண்டும் சென்று அந்த அழகிய நிகழ்வுகளை இன்னும் ஒருமுறை அனுபவித்துவிட மாட்டோமா என பல நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் பாக்கியசாலிகளான அந்த 90ஸ் கிட்ஸ்களில் நானும் ஒருத்தி..!