ஆய்வு  முகநூல்
இந்தியா

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக, ஏழைகள் ஏழைகளாகவும்.... ஆய்வு சொல்வதென்ன?

இந்தியாவில் 100 கோடி மக்கள் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

PT WEB

இந்திய மக்கள் தொகையில் சுமார் 100 கோடி பேர், தங்கள் இஷ்டப்படி செலவழிக்க பணம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்’ என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்வதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

அதேசமயம், இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறியிருப்பதாகவும், ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, மக்களிடம் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்திருப்பதும் முக்கியக் காரணம் என்கிறது ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை. குறிப்பாக, இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, `இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகக் கூறுகிறது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரி செலுத்தும் மக்கள் தொகையில் 50% பேரின் வருமானம் முழுமையாக தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதேபோல, மார்செல்லஸ் முதலீட்டு நிறுவனமும், `இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்த வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.