பீகார் மற்றும் அசாமில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி மேலும் 9 பேர் உயிரிழந்திருப்பதை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்மாநிலத்தின் ராய்கட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் தலைநகர் டெல்லியிலும் கனமழை பெய்துள்ளது. இந்தச் சூழலில் அசாமில் மேலும், ஐந்து பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் 17 மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 27 லட்சத்து 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், பீகாரிலும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 82 லட்சத்து 84 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் வங்காள விரிகுடாவில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒடிசாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. இதே போல், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கோவா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் கனமழை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.