FIRE ACCIDENT ANI
இந்தியா

மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ.. தீயின் நடுவே சிக்கிய 9 பிஞ்சு உயிர்கள்.. நொடியில் காத்த தேவதைகள்!!

திடீரென பற்றி எரிந்த தீ.. மருத்துவமனையில் எங்கும் கரும்புகை... என்ன செய்வதென்றே தெரியாமல் மக்கள் திகைத்து நிற்க, தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து பச்சிளம் குழந்தைகளை மீட்கும் காணொளி தற்போது இணையவாசிகளின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது.

PT WEB

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் செயல்பட்டு வரும் Asian Hospital-ல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மருத்துவமனையின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென எரிய அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.அப்போது மருத்துவமனையில் சுமார் 58 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் 9 பச்சிளம் குழந்தைகளும் இருந்ததாக சொல்லப்படுகிறது. மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். Intensive Care Unit-ல் இருந்த 9 பச்சிளம் குழந்தைகளையும் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களும் மருத்துவமனை ஊழியர்களும் இணைந்து மேற்கொண்ட துரிதமான மீட்பு நடவடிக்கையின் காரணமாக, 9 பச்சிளம் குழந்தைகள் உட்பட 58 நோயாளிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

FIRE ACCIDENT

அதிர்ஷ்டவசமாக, இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை மீட்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த முறை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆபத்தான சூழ்நிலையிலும் பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர