டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால், தம்மீது இதுவரை 9 முறை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளார். இதில் முதல்வராக பதவியேற்றதில் இருந்து 5 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கட்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர், யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சித் தொண்டர்கள் கெஜ்ரிவால் நின்றிருந்த ஜீப்பில் இருந்து சுரேஷை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
விசாரணையில், கட்சித் தலைவர்களின் அணுகுமுறையால் மிகுந்த அதிருப்தி அடைந்து கெஜ்ரிவாலை அவர் தாக்கியதாக தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இதுவரை 9 முறை தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் இத்தனை முறை ஒரு முதல்வர் மீது தாக்குதல் நடந்திருக்காது என்றும், தனது பாதுகாப்பு எதிர்க்கட்சியான பாஜக வசம் இருப்பதே தாக்குதல் சுலபமாக நடப்பதற்கு காரணம் என்றும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.