செய்தியாளர் - கார்த்திகேயன்
இயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகியதால், நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 50 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட இந்தப் பனிப்பாறைகளில் இருந்து உருகிய நீர், 300 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து தாக்கியதில், பொதுமக்களின் குடியிருப்புகள் அடித்து வீசப்பட்டன.
இந்த மாபெரும் பேரிடரில் சிக்கி, 1,335 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாபெரும் பேரிடர் உலக நாடுகளுக்கு ஒரு பாடமாக மாறியதால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையை, அதன் அருகில் உள்ள நாடுகள் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் பனிப்பாறை ஏரிகளை, மண்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில், 9 முதல் 12 ஏரிகள், மிகமிக ஆபத்தான மற்றும் முக்கியமான கட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஏரிகளின் இயற்கையான தடுப்புகள் உடைந்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 30 முதல் 60 சதவீதம் வரையில், பல பனிப்பாறைகள் விரிவடைந்து வருவதையும், ஆய்வாளர்கள் கண்டறிந்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகுவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் நிலத்தடியில் பல ஆண்டுகளாக உறைந்து கிடக்கும் மண் அடுக்கும் உருகி வருவதாகவும், இதனால் மலைப்பகுதியில் உள்ள நிலப்பரப்புகள் உறுதித்தன்மையை இழந்து நிலச்சரிவுகள் மற்றும் பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை, வாகனப் போக்குவரத்து மற்றும் மனித நடவடிக்கைகளால் பனிப்பாறைகளின் மீது கார்பன் மற்றும் தூசுப் படலங்கள் படிந்துள்ளன. இந்தத் தூசுப் படலம் சூரிய வெப்பத்தை அதிகமாக உறிஞ்சி, பனிப்பாறைகள் உருகும் வேகத்தை பல மடங்கு துரிதப்படுத்துகிறது. பாதிக்கப்படக்கூடிய கீழ்ப் பகுதி சமூகங்களை முன்கூட்டியே பாதுகாக்க, செயற்கைக்கோள் கண்காணிப்புடன் சேர்த்து முறையான தரைவழி உளவு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.