மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக்குழு அறிக்கை 2028ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையையும் இந்த ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் திருத்தங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் அமைப்பே சம்பள கமிஷனாகும். இது, பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக்குழு அறிக்கை 2028ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
8ஆவது ஊதியக்குழுவை அமைத்து கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தற்போதுவரை அதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிக்கை உள்ளிட்ட அம்சங்கள் வெளியாகவில்லை. எனவே உரிய நடைமுறைகளை பின்பற்றி ஊதியக்குழு அறிக்கை அமலுக்கு வர 3 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது. முந்தைய காலங்களிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டு 2,3 ஆண்டுகள் கழித்தே அதன் அறிக்கைகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2016ஆம் ஆண்டு 7வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டது, இதனால் அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது ஜூலை 2016 முதல் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்தியது, இருப்பினும் ஜனவரி 2016 முதல் பின்னோக்கிப் பரிசீலித்து அமல்படுத்தப்பட்டது.