8வது ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என ஆம்பிட் கேப்பிட்டல் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஊதிய உயர்வுக்கான ஆணையம் அமைப்படும். கடைசியாக 2016இல் 7ஆவது ஊதியக்குழு அளித்த அறிக்கை அமலுக்கு வந்த நிலையில் 8ஆவது ஊதியக்குழு அறிக்கை வரும் நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. இதன்படி குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 32 ஆயிரத்து 940 முதல் 44 ஆயிரத்து 280 ரூபாய் வரை அதிகரிக்க கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
FITMENT FACTOR என்ற விதிப்படி இக்கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. 50 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியம் பெறபவர்களுக்கு ஊதிய உயர்வு 91 ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு கோடியே 12 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன் கிடைக்கும் நிலையில் அது பல்வேறு வழிகளில் செலவுகளை ஊக்குவித்து அரசிற்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்றும் வீடுகள் விற்பனை, வீட்டுபயோக பொருட்கள் விற்பனை, வாகனங்கள் விற்பனை, பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவை அதிகரித்து ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.