8வது சம்பள கமிஷன் அமலானால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 மாத நிலுவைத் தொகை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையையும் இந்த ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் திருத்தங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் அமைப்பே சம்பள கமிஷனாகும். இது, பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், அதற்கான அறிகுறிகள் இதுவரை நடைபெறவில்லை.
எனினும், கடந்த ஜனவரியில், மத்திய அரசு 8வது சம்பளக் குழுவை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இருப்பினும், கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பிறகும், முறையான அறிவிப்பு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தாமதம், கமிஷன் எப்போது அமைக்கப்படும், அதன் பரிந்துரைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் ஊழியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, 7வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. கடந்தகால அடிப்படையில், எந்தவொரு சம்பளக் குழுவும் பொதுவாக அதன் அறிக்கையைத் தயாரிக்க 18 முதல் 24 மாதங்கள் ஆகும். பின்னர் அரசாங்கம் மறுஆய்வு மற்றும் இறுதி ஒப்புதலுக்கு மேலும் 3 முதல் 9 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
அந்த வகையில், இதேபோன்ற காலக்கெடு பின்பற்றப்பட்டால், 8வது சம்பளக் குழுவின் அறிக்கை ஏப்ரல் 2027க்குள் தயாராகிவிடும். இருப்பினும், பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் பின்னோக்கிச் செயல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 17 மாத ஊதிய நிலுவைத் தொகையைப் பெறலாம். கோடக் நிறுவன பங்குகளின் பகுப்பாய்வின்படி, 8வது சம்பளக் குழுவின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.30,000 ஆக உயரக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. ஆக, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் 2027 நிதியாண்டில் செயல்படுத்தப்படும், இது 17 மாத நிலுவைத் தொகையை மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மத்திய ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட மற்றும் சீரான சம்பள அமைப்பையும் கொண்டுவரும்.