model image x page
இந்தியா

8வது சம்பளக் கமிஷன் | ஆரம்பமே இவ்வளவா.. மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு உயர்வு கிடைக்கும்?

8வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prakash J

8வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8வது சம்பளக் கமிஷன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையையும் இந்த ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் திருத்தங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஓர் அமைப்பே சம்பள கமிஷனாகும்.

இது, பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

model image

தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகவும், ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 ஆகவும் பெறுகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் 8வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்காக, கடந்த ஜனவரியில், மத்திய அரசு 8வது சம்பளக் குழுவை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. இருப்பினும், கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பிறகும், முறையான அறிவிப்பு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, 7வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைய இருக்கிறது.

8வது சம்பளக் கமிஷன் - அமைச்சரவை ஒப்புதல்

இந்த நிலையில்தான், 8வது மத்திய ஊதியக் குழுவின் பணி விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒரு தலைவர், ஓர் உறுப்பினர் (பகுதிநேர) மற்றும் ஓர் உறுப்பினர்-செயலாளர் ஆகியோரைக் கொண்ட ஒரு தற்காலிக அமைப்பாக 8வது மத்திய ஊதியக் குழு இருக்கும். இது, ஆணையம் உருவாக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும்.

விரைவில் ஆணையம் அமைக்கப்பட்டாலும், அறிக்கையைத் தயாரிக்கவும், அரசாங்க ஒப்புதலைப் பெறவும், அனைத்தையும் இறுதி செய்யவும் நேரம் எடுக்கும். கடந்தகால அடிப்படையில், எந்தவொரு சம்பளக் குழுவும் பொதுவாக அதன் அறிக்கையைத் தயாரிக்க 18 முதல் 24 மாதங்கள் ஆகும். பின்னர் அரசாங்கம் மறுஆய்வு மற்றும் இறுதி ஒப்புதலுக்கு மேலும் 3 முதல் 9 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அந்த வகையில், இதேபோன்ற காலக்கெடு பின்பற்றப்பட்டால், 8வது சம்பளக் குழுவின் அறிக்கை 2027க்குள் தயாராகிவிடும்.

model image

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

இதற்கிடையே, 8வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அனைத்து மட்டங்களிலும் சம்பளம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், சரியான தொகை பல காரணிகளைப் பொறுத்து அமையும் என்று கூறப்படுகிறது. முந்தைய சம்பளக் கமிஷன்களைப் போலவே, பல கொடுப்பனவுகள் நீக்கப்படலாம் அல்லது மற்றவற்றுடன் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது சம்பள அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கம் கொண்டவையாகவும், இதனால் பல கொடுப்பனவுகள் பாதிக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஜனவரி 1, 2016 அன்று 7வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டபோது, ​​கிட்டத்தட்ட 200 வகையான கொடுப்பனவுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இவற்றில் 52 ரத்து செய்யப்பட்டு மீதமுள்ளவை இணைக்கப்பட்டன. 8வது சம்பளக் குழுவிலும் இதே நடைமுறை தொடரும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த முறை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை அதிகரிப்பதிலும், சிறிய கொடுப்பனவுகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படலாம்.

அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?

மேலும், புதிய ஊதியக் குழுவின்கீழ் சம்பள உயர்வு முதன்மையாக ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது, ஊழியர்களின் அதிகரித்த சம்பளத்தைக் கணக்கிடப் பயன்படுகிறது. (பிட்மென்ட் காரணி என்பது அரசாங்கம் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை தீர்மானிக்கப் பயன்படுத்தும் ஒரு அளவீடு ஆகும்). அந்த வகையில், புதிய ஊதியக் குழுவில் பயன்படுத்தப்படும் ஃபிட்மென்ட் காரணி, அடிப்படை சம்பளத்தால் பெருக்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள்

உதாரணமாக, அடிப்படை சம்பளம் 20,000 ரூபாயாகவும், ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆகவும் இருந்தால், 20,000 x 2.5 = 50,000 ஆக இருக்கும். இதன் பொருள் 20,000 ரூபாயின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக அதிகரிக்கும். புதிய சம்பளக் குழுவிற்கான ஃபிட்மென்ட் காரணி 1.83 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், சம்பளம் 13% முதல் 34% வரை அதிகரிக்கும். இருப்பினும், உண்மையான அதிகரிப்பு 8வது சம்பளக் குழு பரிந்துரைகளை அங்கீகரிக்கும்போது அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும் ஃபிட்மென்ட் காரணியைப் பொறுத்தே அமையும். இந்தப் புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.