மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையையும் இந்த ஊதிய குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சலுகைகள் திருத்தங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பே சம்பள கமிஷனாகும். இது, பொருளாதார நிலைமை, பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள அளவுகளை திருத்துவதற்காக ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது 7ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டில் 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிப்பதால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அதன்படி, 8ஆவது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.19,000 வரை உயரக்கூடும் என்று ’கோல்ட்மேன் சாக்ஸ்’ தெரிவித்துள்ளது.
இந்த ஊதிய திருத்தத்தால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். தற்போது, ஒரு நடுத்தர அரசு ஊழியர் மாதத்திற்கு சராசரியாக ரூ. 1 லட்சம் சம்பாதிக்கிறார் (வரிக்கு முன்). இந்த நிலையில், வெவ்வேறு பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில், எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு பின்வருமாறு அமையலாம் எனக் கூறப்படுகிறது.
xரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கீட்டால் - சம்பளம் மாதத்திற்கு ரூ.1,14,600 ஆக உயரக்கூடும்.
ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீட்டால் - சம்பளம் மாதத்திற்கு ரூ.1,16,700 ஆக உயரக்கூடும்.
ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கீட்டால் - சம்பளம் மாதத்திற்கு ரூ.1,18,800 ஆக அதிகரிக்கக்கூடும்.
என்றாலும், இதுவரை 8ஆவது சம்பளக் குழுவை அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், அரசாங்கம் ஏப்ரல் 2025இல் அதற்கான குழுவை அமைக்கலாம் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027க்குள் நடைமுறைக்கு வரும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். முன்னதாக, 2016ஆம் ஆண்டு 7வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டது, இதனால் அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது ஜூலை 2016 முதல் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை திருத்தியது, இருப்பினும் ஜனவரி 2016 முதல் பின்னோக்கிப் பரிசீலித்து அமல்படுத்தப்பட்டது.