அந்தமான் கடல் பகுதியில் மீத்தேன் வாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சிக்கு ஒரு மைல்கல் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்தமான் படுகையில் (Andaman Basin) இயற்கை எரிவாயு இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
வாயு இருப்பிடம்: அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 9.20 கடல் மைல் (17 கி.மீ) தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம் 2 என்ற இடத்தில் இந்த எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது 295 மீட்டர் நீர் ஆழத்திலும், 2,650 மீட்டர் இலக்கு ஆழத்திலும் அமைந்துள்ளது.
மீத்தேன் அளவு: இந்த கிணற்றின் ஆரம்ப உற்பத்தி சோதனையில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கப்பல் மூலம் காக்கிநாடாவுக்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்பட்ட எரிவாயு மாதிரிகளில் 87% மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எரிசக்தி வாய்ப்புகள்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "அந்தமான் கடலில் எரிசக்தி வாய்ப்புகளின் ஒரு கடல் திறக்கப்பட்டுள்ளது" என்று சமூக ஊடகத்தில் (X) பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் இலக்கு: இந்த ஆவிஷ்காரம், வடக்கு மியான்மரிலிருந்து தெற்கில் இந்தோனேசியா வரை உள்ள பகுதியில் உள்ள கண்டுபிடிப்புகளுக்கு இணையாக, அந்தமான் படுகையில் இயற்கை எரிவாயு வளம் நிரம்பியுள்ளது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
"சமுத்திர மந்தன்" திட்டம்: பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் (National Deep Water Exploration Mission) கீழ், இந்தியாவின் ஹைடிரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த எரிவாயு கண்டுபிடிப்பு, இந்தியாவின் எரிசக்தி துறையில் தன்னிறைவுக்கான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.