தொகுதி மறுவரையறை web
இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதா சொல்வது என்ன?

2029-க்கு முன் மகளிர் 33% இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை திட்டம்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக, தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மீண்டும் முன்னெடுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, திருத்தியமைக்கப்பட்ட மூன்று வரைவு மசோதாக்களுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மறுகூட்டத் தொடரில் இந்த மசோதாக்களை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை 2029 தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தொகுதி மறுவரையறை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

parliament

இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. அதேபோல், மாநில சட்டப்பேரவைகளிலும் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மாநிலங்களுக்கு இடையிலான தற்போதைய தொகுதிப் பங்கீட்டு விகிதம் 2051-ம் ஆண்டு வரை மாற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுதி மறுவரையறைக்கு 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையாகக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2027-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும், ஒவ்வொரு மூன்று தேர்தல்களுக்குப் பிறகும் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Parliament

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்த ஆணையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் மீண்டும் கூடவுள்ளன. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு தோல்வியடைந்த மசோதாக்களுக்குப் பதிலாக புதிய மசோதாக்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.