இந்தியா

இந்திய நாடாளுமன்றத்தில் 83% பேர் கோடீஸ்வர உறுப்பினர்கள்

webteam

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 83 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாகவும், 33 சதவிகிதத்தினர் குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பதும் ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என அழைக்கப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலை அடுத்து இந்தியா முழுவதும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது தங்கள் சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். 

இந்நிலையில் ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் சொத்து மதிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 521 எம்.பி.க்களில் 430 எம்பிக்களின் சொத்து மதிப்பை ஆய்வு செய்ததில் அவர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவைச் சேர்ந்த 227 எம்பிக்களும், ‌காங்கிரஸ் கட்சியின் 37 எம்பிக்களும், அதிமுகவின் 29 எம்பிக்களும் கோடீஸ்வரர்களாக இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போதுள்ள எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு 14 கோடியே 72 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ‌50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 கோடி ரூபாய்க்கும் மேலாகவும், 2 எம்பிக்களின் சொத்து மதிப்பு 5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும் தற்போதுள்ள எம்.பிக்களில் 33 சதவிகிதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.