இந்தியா

எங்கள் பணியாளர்களில் 80% பேர் இந்துக்களே - நமாஸ் சர்ச்சைக்கு லூலூ நிர்வாகம் பதில்

ஜா. ஜாக்சன் சிங்

நமாஸ் விவகாரம் பெரும் சர்ச்சையானதை அடுத்து, தங்களிடம் உள்ள பணியாளர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்தான் என்று லக்னோ லூலூ நிர்வாகம் பதிலளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாக கொண்டுள்ள வணிக நிறுவனம் லூலூ. உலகில் இந்தியா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அந்த வகையில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த 10-ம் தேதி லூலூ வணிக வளாகம் திறக்கப்பட்டது. இதனை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, இந்த லூலூ வணிக வளாகத்துக்குள் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழுகை (நமாஸ்) செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பொது இடத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்புகள், லூலூ வணிக வளாகம் முன்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, அங்கு அனுமன் மந்திரத்தை உச்சரிக்கும் சடங்குகளையும் இந்து அமைப்பினர் நடத்தினர்.

இதனிடையே, இந்தியாவில் தொழில் நடத்தும் லூலூ வணிக நிறுவனங்கள், முஸ்லிம்களை மட்டுமே வேலைக்கு எடுப்பதாக இந்து அமைப்பினர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் லூலூ நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இந்தியாவில் இருந்து அந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, லக்னோவில் உள்ள லூலூ வணிக வளாக நிர்வாகம் தன்னிலை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "எங்கள் பணியாளர்களை திறமை, தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணியில் சேர்க்கிறோம். ஜாதி, மதத்தின் அடிப்படையில் அல்ல. எங்கள் வணிக வளாகத்தில் இருக்கும் ஊழியர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்களே. மீதமுள்ள 20 சதவீதம் பேர் கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள். எங்கள் நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், வணிக வளாகத்தில் தொழுகை நடத்தியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அவர்கள் எங்கள் ஊழியர்கள் அல்ல" என லூலூ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, லூலூ நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், வணிக வளாகத்தில் தொழுகை நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.