இந்தியா

ஐன்ஸ்டீனை விட அதிக IQ லெவல்.. 8 வயதில் பால் புரஸ்கார் வாங்கி அசத்திய சிறுவன் ரிஷி ஷிவ்!

Rishan Vengai

புதுமையான அபரிவிதமான ஆற்றலுடைய குழந்தைகளுக்காக வழங்கப்படும் தனித்துவ விருதான பால் புரஸ்கார் விருது, பெங்களூரை சேர்ந்த 8 வயது சிறுவனான ரிஷி ஷிவ் பிரசான்னாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசானது புதுமை, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், வீரம் ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைக்கும் குழந்தைகளுக்கு, பால் புரஸ்கார் என்ற விருதை வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் தனித்துவமான பால் புரஸ்கார் விருது, 3 ஆண்ட்ராய்ட் ஆப்களை கண்டுபிடித்ததற்காக 8 வயதுடைய ரிஷி ஷிவ் பிரசன்னா என்ற சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதுமையான திறமையுடன் காணப்படும் ரிஷி ஷிவ் பிரசன்னாவிற்கு, பால் புரஸ்கார் விருதை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவரது கையால் வழங்கி கௌரவித்தார்.

ஐன்ஸ்டீனை விட அதிக IQ குறியீடுடன் இருக்கும் ரிஷி ஷிவ் பிரசன்னா!

குழந்தைகள் எப்போதும் அதிக சுறுசுறுப்புடன் இருப்பார்கள், வளர்ந்த மனிதர்களால் முடியாத கடினமான சில விஷயங்களை கூட எளிதாக சிறுவயது குழந்தைகள் செய்துவிடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் மட்டும் தான் அதற்கும் அதிகப்படியான ஆற்றலுடன் காணப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு குழந்தையாக தான் இந்த 8 வயது பிரசன்னாவும் பல அற்புதமான ஆற்றலுடன் காணப்படுகிறார். இவர் தனது 8 வயதிற்குள்ளயே 3 ஆண்ட்ராய்டு ஆப்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இவருடைய IQ லெவலானது 180 குறியீடுடன் இருக்கிறது. இது எந்தகாலத்திற்கும் சிறந்த இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை விட அதிகமானதாகும். மேலும் அறிவுடையவர்களின் IQ லெவலாக கணிக்கப்படும் 130 குறியீடுகளை விட அதிகமான லெவலுடன், ரிஷி ஷிவ் பிரசன்னா காணப்படுகிறார்.

8 வயதில் 3 ஆண்ட்ராய்ட் ஆப்கள்- ஒரு யுடியூப் சேனலையும் நடத்துகிறார்

8 வயது சிறுவனான ரிஷி ஷிவ் பிரசன்னா, 5 வயதிலிருந்தே கோடிங் செய்வதில் அதிக ஆர்வமுடையவராக இருந்து வந்துள்ளார். அவர் தற்போது 3 ஆண்டிராய்ட் ஆப்களை உருவாக்கி உள்ளார். ஒன்று குழந்தைகளுக்கான "IQ Test App", மற்றொன்று "Countries of the world" மற்றும் "CHB" என்ற 3 ஆப்களை உருவாக்கியுள்ளார்.

மேலும் அவர் ஒரு யுடியூப் சேனலையும் நடத்திவருகிறார். அதில் அறிவியல் சார்ந்த தலைப்புகளில் செய்திகளை பகிர்ந்து வருகிறார்.

உயர்தர IQ குறியீடு அமைப்பான மென்சாவின் உறுப்பினராக ரிஷி ஷிவ் பிரசன்னா இருக்கிறார்!

உலகின் பழைய மற்றும் பெரிய IQ குறியீடு அமைப்பான மென்சாவில் 4.5 வயதில் உறுப்பினராக சேர்ந்து இருந்து வருகிறார் ரிஷி ஷிவ் பிரசன்னா.

மென்சா என்பது ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாக இருந்துவருகிறது. இந்த அமைப்பானது தரப்படுத்தப்பட்ட IQ நுண்ணறவுத்தேர்வில், 98% அல்லது அதற்குமேல் மதிப்பெண் பெற்றவர்களுக்காக திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

”2 மணி நேரத்திற்கு ஒருமுறை புத்தகம் படிக்கவில்லை என்றால் அடுத்த 4 மணி நேரத்திற்கு படிப்பறிவில்லாமல் இருப்பீர்கள்”- பிரசன்னா

முன்னதாக ஒரு உரையாடலில் பேசியிருந்த ரிஷி ஷிவ் பிரசன்னா, “நிறைய புத்தகங்களைப் படிக்கும்போதுதான் அறிவைப் பெற முடியும். நீங்கள் படிக்கும் போது எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும், எந்த விதமான கேள்விக்கும் பதில் சொல்வதில் பயம் இருக்காது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நீங்கள் புத்தகம் படிக்கவில்லை என்றால், அடுத்த நான்கு மணி நேரத்திற்கு நீங்கள் படிப்பறிவில்லாமல் இருப்பீர்கள்.

நான் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக இருக்க விரும்புகிறேன், மேலும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் என்னுடைய பங்களிப்பை தர விரும்புகிறேன்”என்று கூறினார்.