இந்தியா

பூப்பறிக்கச் சென்ற 8 வயது சிறுமியைக் கொன்ற முதலை..!

Sinekadhara

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தின் பண்டித்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுமி ராதிகா. அவர் சகோதரியுடன் தனது இருப்பிடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குடி பக்வான்பூர் கிராமத்திற்கு பூக்கள் பறிக்க சென்றிருக்கிறார்.

அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியும் நிறைந்த சதுப்புநில காடுகளாக இருந்ததால், ஆகாயத் தாமரைகள் படர்ந்து மூடியிருந்திருக்கிறது. நீர்நிலைக்கு அருகில் சென்றபோது திடீரென தண்ணீருக்குள் இருந்துவந்த முதலை ராதிகாவின் கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராதிகாவின் சகோதரி தனது பெற்றோரிடம் ஓடிச்சென்று கூறியிருக்கிறார்.

ஹரித்வாரின் வனத் துறை அதிகாரி நீரஜ் ஷர்மாவுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். உள்ளூர் காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், பல மணிநேரங்களாகத் தேடியிருக்கின்றனர். சகதியாக இருந்ததால், தேடும் பணி சிரமமாக இருந்ததாகவும், கடைசியில் ராதிகாவின் உடலைக் கண்டுபிடித்ததாகவும் வனத்துறை அதிகாரி கௌரவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமியின் கையில் முதலை கடித்த காயம் இருந்ததாகவும், ஆனால் சகதியாக இருந்ததால், சிறுமியை சாப்பிடாமல் விட்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமான சதுப்புநிலம் இருப்பதால் முதலையை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

சிறுமியை இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். உத்தரகாண்டில் 2018இல் 123 முதலைகள் இருந்ததாகவும், தற்போது இனப்பெருக்கம் அடைந்து 2020இல் 451 முதலைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.