இந்தியா

சண்டை போட்டதற்காக நண்பனை கடத்திக் கொலை செய்த 13 வயது சிறுவன்!

சண்டை போட்டதற்காக நண்பனை கடத்திக் கொலை செய்த 13 வயது சிறுவன்!

ச. முத்துகிருஷ்ணன்

டெல்லியில் சண்டை போட்டதற்காக 8 வயது சிறுவனை கடத்தி அவனது நண்பனான 13 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகினி பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் தம்பதி தங்கள் 8 வயது மகனை சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கடத்தல் வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில் காணாமல் போன சிறுவன் சனிக்கிழமை அன்று அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவனுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 13 வயது சிறுவனை விசாரித்தபோது பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின. 8 வயது சிறுவன் தன்னுடன் சண்டையிட்டதால் அவனை கொலை செய்துவிட்டதாக 13 வயது சிறுவன் கூற, காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், “நாங்கள் இருவரும் கடந்த வாரம் கடுமையாக சண்டையிட்டோம். அவனது அம்மா நகைகளையும் பணத்தையும் தொலைத்து விட்டார், அதற்கு நான் தான் காரணம் என கூறியதால் நான் அவனை அடித்தேன். பதிலுக்கு அவன் என்னை கடுமையாக தாக்கினான். இதனால் அவனை பழிவாங்க எண்ணி தனியாக அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளான். இதையடுத்து கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலத்தையும் செல்போனையும் சோஹாதி கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொலை செய்த சிறுவனை கைது செய்து கண்காணிப்பு நிலையத்தில் வைத்துள்ளனர். சிறுவனின் குடும்பத்திடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.