Bjp-Congress
Bjp-Congress File image
இந்தியா

ரூ.6,046.81 கோடியை எட்டியது பாஜக! - 8 தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு உயர்வு! கடன் லிஸ்டும் ரிலீஸ்

Prakash J

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்(ADR), பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 8 தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி, கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் தனது சொத்து மதிப்பாக ரூ.6,046.81 கோடியை அறிவித்துள்ளது. இது முந்தைய 2020-21ஆம் ஆண்டின் சொத்து மதிப்பான ரூ.4,990 உடன் ஒப்பிடும்போது 21.17 சதவீத அதிகரிப்பு ஆகும்.

அதேபோல கடந்த 2020-21ஆம் ஆண்டில் ரூ.691.11 கோடியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டில் 16.58 சதவீதம் உயர்ந்துள்ளது. அது ரூ.805.68 கோடியாகி உள்ளது. பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 8 தேசியக் கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.8,829.16 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.7,297.62 கோடியாக இருந்தது. தேசியக் கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் சொத்து மதிப்பு மட்டும் குறைந்துள்ளது.

தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பைப்போல அவற்றின் கடன் அளவு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸுக்கு ரூ.41.95 கோடி கடன் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.12.21 கோடி, பா.ஜனதாவுக்கு ரூ.5.17 கோடி கடன் இருக்கிறது.

பிரதமர் மோடி

அதேசமயம், பா.ஜனதா அதிகபட்சமாக ரூ.6,041.64 கோடி இருப்புத்தொகையை கொண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ரூ.763.73 கோடியை இருப்பு வைத்திருக்கிறது. ஆனால் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி, தாங்கள் யாரிடம் இருந்து கடன் பெற்றோம் என்ற விவரத்தை எந்த தேசியக்கட்சியும் வெளியிடவில்லை.