இந்தியா

8 மாதக்குழந்தை தொண்டையில் சிக்கிய நெயில் கட்டர் - அறுவைசிகிச்சையில் போராடிய மருத்துவர்கள்!

Sinekadhara

மகாராஷ்டிராவில் 8 மாத குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது நெயில் கட்டரை விழுங்கியது. அதனை மருத்துவர்கள் மிகுந்த சிரத்தைக்குப்பிறகு அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி திங்கட்கிழமை 8 மாத குழந்தை 5 செ.மீ நீளமுள்ள நெயில் கட்டரை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அதை விழுங்கிவிட்டது. அதனை கவனித்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அத்கோனிலுள்ள டாக்டர் வசந்த்ராவ் பவார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்துள்ளனர்.

முதலில் எக்ஸ்-ரே மூலம் குழந்தையின் தொண்டையில் நெயில் கட்டர் சிக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் குழு, ஒரு மணிநேரம் மிகுந்த போராட்ட அறுவைசிகிச்சைக்குப்பிறகு வெற்றிகரமாக அதை வெளியே எடுத்துள்ளனர். தற்போது குழந்தை மருத்துவர்கள் கவனிப்பில் உள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதில்லை. கடந்த ஆண்டு இதேபோல் 6 வயது சிறுமி ஒருவர் 23 காந்தமணிகளை விழுங்கியது குறிப்பிடத்தக்கது. பொம்மையை அலங்கரிப்பதற்காக வாங்கிவந்த காந்த மணிகளை சிறுமி விழுங்கிவிட்டாள், பின்னர் வயிற்றிலிருந்த காந்தமணிகளை அறுவைசிகிச்சைமூலம் மருத்துவர்கள் அகற்றினர்.