இந்தியா

நிவாரண முகாம்களில் சிக்கித் தவிக்கும் 8 லட்சம் கேரள மக்கள்..!

Rasus

கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 8 லட்சம் மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். முகாம்களில் இருந்து வீடு திரும்பியோருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் 10-க்கும் அதிகமான மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். நிவாரண முகாம்களில் தங்கி இருந்த இவர்கள், மீண்டும் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். எனினும் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் தான் தங்கியுள்ளனர் என கேரள அரசு தெரிவித்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தின் 700 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு ஏற்கும் என நம்புவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மழை வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே 700 கோடி ரூபாய் நிதியுதவி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என அந்நாட்டு தூதர் கூறி இருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.