கேரளாவில் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், எர்ணாக்குளம் மாவட்டம் கோலன்சேரி என்ற கிராமத்தில் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி மர்மநபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவரின் தனிப்பட்ட பாகங்கள் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கோலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதுகுறித்து கோலஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகையில், “மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மூதாட்டியிடம் இருந்து எந்த ஒரு தெளிவான பதிலும் வாங்க முடியவில்லை. அவருக்கு சில காயங்கள் உள்ளன. காயங்களை ஏற்படுத்த ஒரு கூர்மையான ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதை உறுதிப்படுத்த அறிவியல் சோதனை செய்ய வேண்டியுள்ளது. அவர் மனநல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருவதாக அவரது பிள்ளைகளும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தனர்.