இந்தியா

டெல்லி போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை.. பலியானோர் எண்ணிக்கை 47ஆக உயர்வு

JustinDurai

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயி ஒருவர் நடமாடும் கழிப்பறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 24 மணி நேரமும் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டதில் கலந்து கொண்டவர்களில் 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமை காலையில் காசியாபாத்தில் உள்ள போராட்ட களத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சர்தார் காஷ்மீர் சிங் என்ற 70 வயதான விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். அங்கு உள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு காஷ்மீர் சிங் தாஸ் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

அதில் அவர், ‘’எனது மரணம் போராட்டத்தில் ஒரு பங்களிப்பாக இருக்கும். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.. இவை இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்காது. இதனை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். ஆனால் அரசு அவற்றை ரத்து செய்யவில்லை.

இந்த போராட்டத்தில் பஞ்சாபில் இருந்து பல விவசாயிகள் ஏற்கனவே இறந்துள்ளனர். ஆனால் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எந்த ஒரு விவசாயியும் உயிரைக் கொடுக்கவில்லை. ஆகவே வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காக எனது உயிரை தியாகம் செய்கிறேன்’’ என்று அக்கடிதத்தில் உருக்கத்துடன் எழுதப்படிருந்தது.