மத்தியப்பிரதேசத்தில் போதைக்காக 'சானிடைசர்' திரவத்தை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் கோவிந்த்புராவின் சேடக் பாலம் அருகே உள்ள கார்கில் காலனியில் வசித்து வருபவர்கள் தர்மேந்திர ஆதிவாசி (17), அருணா (22), அமர்நாத் (70). ஒரே குடும்ப உறுப்பினர்களான இவர்கள் குப்பைகளை சேகரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, குப்பைகளிலிருந்து ஒரு சானிடைசர் பாட்டிலை கண்டெடுத்தனர். மூவரும் சேர்ந்து மதுபோதைக்காக அந்த சானிடைசர் திரவத்தை குடித்துள்ளனர். குடித்த 2 மணி நேரத்தில் மூவரின் உடல்நிலைமையும் இரவில் மோசமடையத் தொடங்கியுள்ளது. ஆனால் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து மற்ற குடும்ப உறவினர்கள் அவர்களை கண்டுகொள்ளவில்லை.
புதன்கிழமை காலையில் தர்மேந்திராவின் உடல்நிலை மோசமடைந்து கிடப்பதைப் பார்த்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதற்கிடையில் அருணாவின் உடல்நிலையும் மோசமடைந்ததை தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு தர்மேந்திர ஆதிவாசியும் சிகிச்சைப் பலனின்றி இறந்துபோனார்.
'சானிடைசர்' திரவத்தை குடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவிந்த்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.