இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் மற்ற மாநிலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. முதலில் பாதிக்கப்பட்டாலும் அடுத்தடுத்த சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை கேரளா கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போதும் அங்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களை விட கேரளா கொரோனா பரவலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
தற்போது மீண்டும் அங்கு கொரோனா பரவிவரும் நிலையில் கேரளா சில விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் வேகமாக கொரோனா பரவி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதியில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள பூந்துரா என்ற கிராமத்திற்கு சென்ற மருத்துவக் குழுவினருக்கு அந்தக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேகமாக கொரோனா பரவும் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ள பூந்துரா கிராமத்துக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவக் குழுவினர் காரில் சென்றுள்ளனர்.
அவர்களை பின் தொடர்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் காரை ஊருக்குள் விடாமல் வழிமறித்துள்ளனர். காரை தாக்கியும் கடும் சொற்களால் வசைபாடியும் அவர்களை அங்கிருந்து போகச் சொல்லியுள்ளனர். மேலும் எங்களுக்கு கொரோனா என்றால் அது உங்களுக்கு வரட்டும் எனக் கூறி மருத்துவக் குழுவினரின் முகத்தின் முன்பு இருமியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து மருத்துவக் குழுவினர் அவசரமாக அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேறினர்.
இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவக் குழுவின் இடம் பெற்ற மருத்துவர் ட்யுதி, கொரோனா குறித்து பொய் சொல்வதாகவும் பொய்யான எண்ணிக்கையையும் சொல்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனைகளில் உள்ளவர்களையும் திரும்ப ஒப்படைக்கும்படி கூறினார்கள். எங்களது முகத்துக்கு நேராக அவர்கள் இருமினார்கள். கொரோனா என்பதை அந்த கிராமத்தினர் நம்ப மறுக்கிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். தற்போது 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். பிறகு கொரோனா பரிசோதனையை நாங்கள் செய்துகொள்ளவுள்ளோம். போலீசார் உதவியின்றி அந்த கிராமத்துக்குள் நுழைய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.